Skip links

அல் முஸ்தபா பல்கலைக்கழக கற்கைநெறி அங்கீகரிக்கப்பட்டதா?

ஊவா மாகாணத்திலுள்ள மலையக இளைஞர், யுவதிகளுக்கு ஈரான் நாட்டின் அல் முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகத்தின் மூலம் பட்டப்படிப்புகளுக்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டமை குறித்து பல்வேறு சர்ச்சைகள் அண்மைக்காலமாக கிளம்பியுள்ளன. பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமாரின் முயற்சியில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் பட்டப்படிப்புகளுக்கான வகுப்புகளை பதுளை மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் முன்னெடுப்பதற்கு மாகாண கல்வியமைச்சில் அனுமதி பெறப்படவில்லையென்றும், இப் பல்கலைக்கழகத்தின் மூலம் மாணவர்களுக்கு அரபு மொழி கற்பிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் மாகாண தமிழ் கல்வியமைச்சர் செந்தில் தொண்டமானினால் முன்வைக்கப்பட்ட நிலையில் அண்மையில் இப்பட்டப்படிப்புகளை ஊவா மாகாணத்தில் முன்னெடுப்பதற்கு தடைவிதித்து ஊவா மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் உண்மைத் தன்மை தொடர்பாக அறிந்து கொள்வதற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஊவா மாகாண தமிழ் கல்வியமைச்சிடம், ஊவா மாகாண பாடசாலைகளில் இப்பாடநெறி முன்னெடுக்கப்படுவதற்கான அனுமதி, தமிழ் கல்வியமைச்சரினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு, மற்றும் இதற்கெதிராக அமைச்சு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் போன்றன தொடர்பாக வினவியபோது, 8/1/9/15 என்ற இலக்க கடிதத் தலைப்பின் மூலம் பின்வரும் விடயங்கள் பதிலாக வழங்கப்பட்டன. ஊவா மாகாணத்தில் பட்டப்படிப்பு கற்கை நெறிகளை தொடர்வதற்கு அனுமதி பெறப்படவில்லையென்றும், பதுளை மாவட்ட தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு அரபு மொழி கற்பிக்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெறவில்லையெனவும், அமைச்சருக்கு வாய் மூலமான முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்விடயம் தொடர்பாக அமைச்சு மட்டத்தில் விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது அல் முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் கற்கை நெறிகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிகப்படவில்லைனெவும், ஊவா மாகாண தமிழ் கல்வியமைச்சின் கீழ் இயங்குகின்ற நான்கு தமிழ் பாடசாலைகளில் அமைச்சின் அனுமதியில்லாமல் வகுப்புக்கள் முன்னெடுக்கப்பட்டமையுமே தற்போதைய பிரதான குற்றச்சாட்டுக்களாக இருக்கின்றன. அதேவேளை இப் பட்டங்களின் மூலம் அரச வேலைவாய்ப்புகளை பெறமுடியாதென இலங்கை அரச சேவை ஆணைக்குழு அறிவித்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கதொன்றாக இருக்கின்றது.

ஊவா மாகாணத்தில் அல் முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகத்தின் கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் கடக்கின்ற நிலையிலும் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்னர், முஸ்லிம்களுடன் தொடர்புடைய சகல நிறுவனங்கள், அமைப்புகள் மீதும் சந்தேகப்படும் ஒரு நிலைமை தோற்றுவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பதுளை மாவட்ட பாடசாலை மாணவர்கள் அரபு கற்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பின்னர், அங்கு இயங்கும் ஈரான் நாட்டின் அனுசரணையுடனான கற்கை நெறிகள் தொடர்பான சந்தேகம் மேலெழுந்தது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், ஊவா மாகாண தமிழ் கல்வியமைச்சின் கீழ் இயங்கிவரும் பதுளை சரஸ்வதி மகா வித்தியாலயம், அப்புத்தளை தமிழ் மகா வித்தியாலயம், பசறை தமிழ் மகா வித்தியாலயம், மற்றும் பண்டாவரளை தமிழ் மகா வித்தியாலயம் போன்றவற்றில் எவ்வித அனுமதியும் பெறப்படாத நிலையில் கற்கை நெறிகள் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றன.

ஊவா தமிழ்க் கல்வி அமைச்சின் கீழ் செயற்படும் பாடசாலை அதிபர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா உட்பட சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டு பாடசாலைகளில் கற்கை நெறிகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுமார் ஒரு வருட காலமாக இக் கற்கை நெறிகள் முன்னெடுக்கப்பட்டு வந்திருப்பதுடன் இப்பட்டப்படிப்பு 2 வருடங்களை கொண்டதாகும். சுமார் 10 வருட காலத்துக்கு இக் கல்வி நடவடிக்கைகளை ஊவா மாகாணத்தில் முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இக்கற்கை நெறி ஆரம்பிக்கும் போது உயர்தர கல்வியின் பின் பாடசாலையை விட்டு விலகிய 650 இளைஞர், யுவதிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் இதில் 130 முஸ்லிம் மாணவர்கள் ஆரம்பத்திலேயே கற்கை நெறியிலிருந்து வெளியேறியுள்ளனர். எஞ்சிய 520 பேரில் 20 பேரே முஸ்லிம்களாவர். மீதமுள்ள 500 பேரும் தோட்டப்புறத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளாவர். இதில் சிறு தொகையினர் கத்தோலிக்கராவருடன் பெரும்பாலானோர் இந்துக்களாவர். இவர்களுக்கு வார இறுதி நாட்களில் அரசறிவியல் கற்கை நெறியின் கீழ் அரபு மொழி, அல் குர் ஆன், ஈரான் இஸ்லாமிய அரசியல் போன்றன பாடங்களாகக் கற்பிக்கப்பட்டிருக்கின்றன.

அதேவேளை அல் – முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகத்தின் சிந்தனைக் கோட்பாடுகள் நம் நாட்டின் பாரம்பரிய முஸ்லிம்களின் கோட்பாட்டிற்கு பாரியளவு முரண்பட்டிருப்பதினால் பிரதேச முஸ்லிம் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன் விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்ததாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பதுளைக் கிளை அறிவித்தல் விடுத்திருக்கின்றது. இதன் காரணமாகவே பல முஸ்லிம் மாணவர்கள் கற்கை நெறியினை கைவிட்டிருக்கலாம். ஆனால், பெருந்தோட்ட தமிழ் மாணவர்களுக்கு கற்கை நெறிகள் தொடர்பான விளக்கமின்மையாலும் இலவசமாக (குறிப்பிட்ட) வழங்கப்பட்டதாலும் இவ்விடயம் பெரிதாக தென்பட்டிருக்காது.

இச்செயற்றிட்டத்தின் ஆரம்பத்திலேயே பெருந்தொகை செலவு செய்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு ஈரானுக்கான சுற்றுலாவுக்கு உதவி வழங்கப்பட்டிருந்ததுடன் கடந்த மாதம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு 10 நாட்களுக்கு முன்பாக இச்செயற்றிட்டத்துடன் சம்பந்தப்பட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளடங்கலாக 10 பேர் ஈரானுக்கான சுற்றுலாவுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் வெளிநாடு செல்வதற்கான அனுமதி கோரி தமிழ் கல்வியமைச்சுக்கு சமர்ப்பித்திருந்த கடிதத்துக்கு அனுமதி வழங்கப்படும் முன்பே, அவர்கள் ஈரானுக்குச் சென்றிருந்தனர். இங்கு கற்பிக்கப்படும் அரசறிவியல் விஞ்ஞான வினாத்தாள்களில் குர் ஆன் மற்றும் அரபு மொழி சம்பந்தமான கேள்விகளே காணப்படுகின்றன. இவ்வினாத்தாள்கள் தமிழ் மொழியில் காணப்பட்டாலும் அதற்கான விடையினை அளிப்பதற்கு அரபு மொழி தெரிந்திருக்க வேண்டும்.

பதுளை மாவட்டத்திலுள்ள தோட்டப்புற தமிழ் இளைஞர், யுவதிகளுக்குக் காணப்படும் பொருளாதார பிரச்சினையை கருத்திற் கொண்டு, ஈரான் தூதுவரிடம் கலந்தாலோசித்து, ஈரானிலிருக்கின்ற அல் முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகத்தின் மூலம் பட்டதாரி கற்கை நெறியொன்றை பெற்றுக் கொடுப்பதற்கான பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது அரசியல் விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களும் இணைப்பாடங்களாக, இந்து, பௌத்தம், கத்தோலிக்கம் மற்றும் இஸ்லாம் சமயங்களும் அரபு மொழியும் கொண்ட சுமார் 3 இலட்சம் ரூபா செலவிலான கற்கை நெறியினை பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார் தெரிவித்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

நேர்முகத் தேர்வின் மூலம் உயர்தரத்தில் 3 பாடங்களை சித்தியடைந்தவர்களுடன் அப்பிரதேசத்திலேயே வசிக்கும் 8 தமிழ் பட்டதாரிகளும் தெரிவு செய்யப்பட்டு இலங்கையில் ஈரான் தூதுவரின் தலைமையின் கீழ் பதுளையில் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்ததாகவும் இந்நிகழ்வுக்கு ஊவா மாகாண தமிழ் கல்வியமைச்சில் கடமையாற்றும் இரு உதவிக் கல்வி அத்தியட்சகர்களும் கலந்து கொண்டிருந்ததாகவும் அரவிந்த குமார் தெரிவித்திருக்கின்றார்.

இன்றைய சூழ்நிலையில் இலங்கையில் அல் முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகம் தடை செய்யப்பட்டிருக்கின்றதா அல்லது அதன் கற்கை நெறிகள் தடை செய்யப்பட்டிருக்கின்றனவா? என்பது தொடர்பாக பல்வேறு குழப்ப நிலைகள் காணப்படுகின்றன. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை அங்கீகரிப்பதில் நடைமுறையொன்று பின்பற்றப்படுகின்றது. பொதுநலவாய பல்கலைக்கழக ஒழுங்கமைப்பினால் வெளியிடப்படுகின்ற பொது நலவாய பல்கலைக்கழக ஆண்டு புத்தகம் மற்றும் சர்வதேச பல்கலைக்கழக அமைப்பினால் வெளியிடப்படுகின்ற சர்வதேச கையேடு ஆகிய இரண்டு பட்டியல்களிலுள்ள பல்கலைக்கழகங்கள் அங்கீகரிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. இதன்படி 2012 ஆம் ஆண்டு இப்பல்கலைக்கழகம் இலங்கைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேவேளை 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இப்பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் கற்கை நெறியானது, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்படவில்லை. உயர் கல்வி அமைச்சாலும் அங்கீகரிக்கப்படவில்லை. அதேவேளை அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் அரச வேலை வாய்ப்புகளுக்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்கள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஏனைய பட்டங்கள் அரச வேலை வாய்ப்புக்கு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாதென தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இருவர் இலங்கை அரசின் உயர் பதவிகளில் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார் சுட்டிக் காட்டியிருக்கும் நிலையில் அதன் உண்மைத் தன்மையினை விசாரணைகளின் மூலம் வெளிக்கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.

ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சின் செயலாளரின் அனுமதியில்லாமல் முஸ்லிம் பாடசாலைகள் தவிர்ந்த மாகாண தமிழ் மொழி மூல பாடசாலைக் கட்டிடங்களே பாடசாலைச் சூழலோ எந்தவித வெளித் தேவைகளுக்காக வழங்கப்பட மாட்டாதென்றும், மாகாண தமிழ் கல்வி அமைச்சர் உள்ளிட்ட எந்தவொரு அரசியல்வாதியும் பாடசாலை நேரத்தின் போது பாடசாலைக்குள் வர அனுமதிக்க வேண்டாமெனவும் ஏதாவது வெளியாரினால் திட்டமிடப்படும் கல்வி சம்பந்தமான நடவடிக்கைகளுக்காகவென்றால் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரினால் அமைச்சுக்கு முன்வைக்கப்படும் செயற்றிட்ட அறிக்கை மூலம் அனுமதி பெற்றுக்கொள்ளாமல் பாடசாலைக் கட்டிடம் அல்லது பாடசாலைச் சூழலை பெற்றுக் கொள்ள முடியாதென ஊவா மாகாண பிரதான செயலாளர் அலுவலகத்தின் மூலம் (          ) தமிழ்க் கல்வி அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், சகல தமிழ் பாடசாலை அதிபர்களுக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அனுமதி பெறாத நிலையில் நான்கு பாடசாலை அதிபர்கள் கட்டிடங்களை வழங்கியுள்ளமையும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுவொரு இலவசமான கற்கைநெறி என்றாலும் பதிவுக்கட்டணம் மற்றும் பரீட்சைக் கட்டணங்கள் என்பன மாணவர்களால் செலுத்தப்பட்டிருக்கின்றன. தற்போது ஊவா மாகாண சபையால் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையின் காரணமாக ஊவா மாகாணத்தில் எந்தவொரு பாடசாலைகள் மற்றும் கட்டிடங்களில் இந்த கற்கைநெறியினை மேற்கொள்ள முடியாது. இதனால், இதனை நம்பியிருந்த இளைஞர், யுவதிகளின் நிலைமை என்னவாகும், செலுத்திய பணம் மீளக் கிடைக்குமா? அதேவேளை இந்த பட்டப்படிப்பு கற்கை நெறி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிப்படாத நிலையில் அதனைக் கற்பதால் என்ன பயன் கிடைக்கப் போகிறது.

அங்கீகரிக்கப்படாத ஒரு கற்கை நெறியினை கொண்டு தோட்ட புற இளைஞர், யுவதிகளை ஏமாற்றும் ஒரு செயற்பாடே கடந்த ஒரு வருட காலமாக முன்னெடுக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. பெருந்தோட்ட மாணவர்களில் பெரும்பாலானோர், உயர்தரம் மற்றும் பட்டதாரி கற்கைகளின் போது பாடநெறிகளைத் தெரிவு செய்வதில் தவறிழைக்கின்றனர். உயர் தரத்தில் மூன்று பாடங்களில் சித்தியடைய வேண்டும். ஏதாவதொரு பட்டதாரி பட்டத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அவர்களது நோக்கமாக இருக்கிறது.

எதிர்கால தொழில் நிலைமையினை கருத்திற் கொண்டு கற்கைகளைத் தீர்மானிக்கும் நிலைமை இல்லை. அதற்கு சிறந்த வழிகாட்டிகளும் அவர்களுக்கு அமையவில்லை.

 

 

Download Article

Leave a comment

This website uses cookies to improve your web experience.