Skip links

ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரி பாதுகாக்கப்படுமா?

அண்மைய காலங்களில் ஸ்ரீ பாத தேசிய கல்வியியற் கல்லூரியில் பல்வேறு சர்ச்சைக்குரிய சம்பவங்கள் நடந்துள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட உணவு விஷமானமை, கல்லூரியின் சமையலறை கூடத்துக்கு சுகாதார அதிகாரிகளினால் சீல் வைக்கப்பட்டமை, கல்லூரி காரியாலயத்தில் மது அருந்தியமை என்பவே அவையாகும். இந்த சம்பவங்களைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்களினால் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கல்வி அமைச்சினால் உரிய காலப்பகுதிக்குள் கல்லூரி நிர்வாகத்தினை கொண்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும், நிர்வாகத்தின் அசமந்த போக்கும் வள து பிரயோகமும் கல்லூரி மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை பாதிப்பதாக அமைந்திருக்கின்றன.

1970 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பெருந்தோட்டப் பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர், சீடா நிறுவனத்தின் மூலம் பாடசாலைகளுக்கு பல கட்டிடங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டன. அதேவேளை ஜேர்மன் நிறுவனமான எஐஙூ நிறுவனத்தினால் மலையக பிரதேசக் கல்வி முன்னேற்றத்துக்காக ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரி அமைத்துக் கொடுக்கப்பட்டது.

ஆரம்ப காலப் பகுதியில் ஒரு இனத்தை சார்ந்ததாக மாத்திரம் கல்லூரி காணப்படக்கூடாது என்பதற்காக 50 வீதம் பெருந்தோட்டத்தைச் சேர்ந்த மாணவர்களும் இருபத்தைந்து வீதம் ஏனைய இனத்தைச் சேர்ந்த தமிழ் மாணவர்களும் 25 வீதம் சிங்கள மாணவர்களையும் உள்ளீர்ப்பதென்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

பின்னர் ஏனைய இனத்தைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள் என்பது இல்லாமல் செய்யப்பட்டு 75 வீதமானோர் இந்திய வம்சாவளித் தமிழ் மாணவர்களும் 25 வீதமானோர் சிங்கள மாணவர்களும் உள்ளீர்க்கப்பட்டனர். தற்போது 25. 01. 2019 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியிலும் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் 75 வீதம் இந்திய வம்சாவளி தமிழர்களும் பெரும்பான்மையினர் 25 வீதம் என்ற அடிப்படையில் கல்லூரிகளுக்கு மாணவர்கள் உள்வாங்கப்படுவதாக கூறப்பட்டாலும் கடந்த காலங்களில் கணிதம், விஞ்ஞானம் மற்றும் நுண்கலை பிரிவுகளுக்கு குறிப்பிட்ட தொகையினரை உள்வாங்க முடியாத நிலையில் அதனை ஏனைய பாடங்களில் பூர்த்தி செய்து 75 வீதம் உள்வாங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த வருடம் அந்த நிலைமை பூர்த்தி செய்யப்படவில்லை.

இதனால் 36 தமிழ் மாணவர்களுக்கான வாய்ப்பு இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. அட்டவணை 1 இன் மூலம் கல்லூரியில் போதிக்கப்படும் துறைகள் மற்றும் அவற்றுக்கு உள்வாங்கப்படுகின்ற மாணவர்கள் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வினவிய போது பின்வரும் விடயங்களை தெரிந்துகொள்ள முடிந்தது.அதேவேளை ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியில் சமீபகாலமாக உணவுப் பாதுகாப்பு பின்பற்றபடாமையும் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமில்லாத வகையில் இருந்து வருவதையும் அவதானிக்க முடிந்தது. ஆனால் சமையலறைக்கு தேவையான ஆளணி மற்றும் நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளதை தகவல் அறியும் உரிமையின் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. இருப்பினும் சுகாதாரமற்ற உணவுத் தயாரிப்பு சூழல் காரணமாக கடந்த பெப்ரவரி மாதம் கல்லூரியின் சமையலறை கூடத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

இதே போலவே 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதமும் ஸ்ரீ பாத கல்லூரியில் வழங்கப்பட்ட பகலுணவு விஷமானதில் 70 மாணவர்கள் பாதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

அட்டவணை இலக்கம் 2 தொடக்கம் 8 வரையிலான பகுதிகளில் கல்லூரி மாணவர்களுக்காக உணவு தயாரிப்பதற்கு பணிக்கமர்த்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை, கல்லூரியின் உணவுப்பட்டியல், கல்லூரியின் பராமரிப்புச் செலவு, உணவுச் செலவு மற்றும் ஏனைய விடயங்களுக்கான செலவு விபரங்களை அறியக் கூடியதாகவுள்ளது.

கல்லூரியின் நிர்வாகச் சீர்கேடுகளில் முக்கியமாக பதிவாளரின் செயற்பாடுகள் விமர்சிக்கப்படுகின்றன. கடந்த 26 வருடகாலமாக கல்லூரியின் பதிவாளராக செயற்பட்டு வரும் இவரிடமே கல்லூரியின் நிதி தொடர்பான அனைத்து அதிகாரங்களும் காணப்படுகின்றன. இவர் தனக்கென்று ஒரு குழுவினை கல்லூரியில் வைத்துக் கொண்டு செயற்படுவதுடன் கல்லூரியின் சொத்துக்கள், கல்லூரி வாகனங்கள் என்பவற்றை சொந்தத் தேவைகளுக்காக முறைகேடாக பயன்படுத்தி வருவதாகவும் குற்றஞ் சுமத்தப்படுகின்றது. குறிப்பாக கல்லூரியில் நான்கு வாகனங்கள் உள்ள போதும் அது மாணவர்களுக்காக பயன்படுத்தப்படாமல் முழுமையாக பீடாதிபதியினதும் பதிவாளரினதும் தனிப்பட்ட தேவைகளுக்காகவே பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கமைவாக பதிவாளர் உட்பட ஏனைய ஊழியர்கள் சிலர் தற்காலிக இடமாற்றத்துக்கு உள்வாங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. அத்துடன் கல்லூரி காரியாலயங்களில் ஊழியர்கள் மது அருந்துவதை கல்லூரி மாணவர்கள் நேரடியாக ஒளிப்பதிவு செய்து வெளியிட்டிருந்தமை சகலரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. (அட்டவணை 9 மற்றும் 10 இல் கல்லூரியில் கடமையாற்றும் கல்வி சாரா மற்றும் கல்விசார் ஊழியர்களின் தொகை குறிப்பிடப்பட்டுள்ளன.)

ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் நலன்களை விடவும் ஊழியர்களின் நலன்கள் தொடர்பிலேயே அதிக கரிசனை கொள்ளப்படுவதை அங்கு இடம்பெறுகின்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எம்மால் இனங்காண முடிகின்றது. மாணவர் விடுதிகளில் காணப்படும் இடப்பற்றாக்குறையினை கவனத்தில் கொள்ளாது, பதிவாளரின் அறையானது சொகுசான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

இக்காரியாலயமானது ஏற்கனவே நல்ல முறையில் இருந்த போதும் தற்போது அவை உடைக்கப்பட்டு அறுபத்தைந்து இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் காரியாலயத்துக்கு அருகிலுள்ள 60 லட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட மலசல கூடமானது மூடப்பட்டு காரியாலய உத்தியோகத்தர்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் உள்ளது. 55 இலட்சம் ரூபா செலவில் கட்டப்பட்ட நீச்சல் தடாகம் வெறுமனே நீர் நிரம்பி பாவனையற்ற நிலையிலேயே காணப்படுகின்றது. கல்லூரியில் ஏற்கனவே முறையாக காணப்பட்ட விருந்தினர் விடுதி மீண்டும் 25 இலட்சம் ரூபாவில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

அதற்கான பாதையமைப்புக்காக 19 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கின்றது. 2016 ஆம் ஆண்டு இரண்டு கோடி ரூபாவுக்கு விரிவுரையாளர் விடுதிகள், பயிலுனர் விடுதிகள் என்பன புனர்நிர்மாணம் செய்யப்பட்டன. ஆனால் அவை முறையாக பராமரிப்புச் செய்யப்படுவதில்லையென குற்றம்சாட்டப்படுகின்றது.

கல்லூரியில் மேற்கொள்ளப்படும் நிர்மாணப்பணிகள் தொடர்பாக முகாமைத்துவக் குழுவினரே தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டிய நிலையில் நேரடியாகப் பதிவாளரே இவ்விடயங்களை தீர்மானிக்கும் நபராக தான் தோன்றித்தனமாக செயற்பட்டிருப்பது வெளிப்படையாகின்றது.

கல்லூரிக்கான நிதி மூலங்களில் கல்வி அமைச்சிடமிருந்து பெறுகின்ற நிதி முக்கிய பங்காற்றுகின்றது. அதன்படி கல்வியமைச்சிடமிருந்து 205 ஆம் ஆண்டு முற்பணமாக 67,755,150 ரூபாவும் 2016 ஆம் ஆண்டு 79,926,500 ரூபாவும் 2017 ஆம் ஆண்டில் 91,9%8,215 ரூபாவும் 2018 ஆம் ஆண்டு 102,552,000 ரூபாவும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

தற்போது முன்னாள் கல்வியமைச்சரும் தற்போதைய விசேட பிராந்தியங்கள் அமைச்சருமான இராதகிருணனால் மேற்படி ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைக்கேடுகள் தொடர்பாக ஆராய்வதற்கு விசாரணைக்குழு அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த விசாரணைக்குழுவின் அறிக்கை வெளியானதன் பின்பே மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியானது பெருந்தோட்டப் பிள்ளைகளின் வரப்பிரசாதமாகக் காணப்படும் நிலையில் பெரும்பான்மையினரின் அடாவடி நடவடிக்கையினால் பறிபோகும் நிலையில் காணப்படுகின்றது. எனவே, அந்நிலைமைகள் களையப்பட்டு ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியின் வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

 

Leave a comment

This website uses cookies to improve your web experience.