நிதி அமைச்சின் கடன் சலுகை வெற்றியளித்ததா?

8

நிதி அமைச்சின் கடன் சலுகை வெற்றியளித்ததா?

இலங்கையில் பின்தங்கிய பிரதேசங்களில் வறுமை நிலையில் வாழும் குடும்பங்களில் நுண்நிதிக் கடன் பாரிய பிரச்சினையை கொண்டு வந்திருக்கின்றது. இந்நுண்நிதிக் கடனானது, வறுமையில் வாழும் குடும்பங்களை இன்னும் வறுமை நிலைக்குத் தள்ளியுள்ளது. குறிப்பாக வறுமையில் வாழும் பெண்கள் மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பெரிதும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளன. இந்நிலைமைகள் பெரிதும் பாதிப்பினை சமூகத்தில் ஏற்படுத்திய நிலையில் இலங்கை நுண்நிதி வழங்குநர் சம்மேளனத்தில் பதிவு செய்துள்ள நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கியில் பதிவு செய்துள்ள நிதிக் கம்பனிகளிலிருந்து ஆகக்கூடியது 100,000 ரூபாவினை (ஆரம்ப மூலதனம்) நுண்நிதிக் கடனாகப்பெற்று 2018 ஜூன் 30 ஆம் திகதி ஆகக் குறைந்தது 3 மாதங்கள் நிலுவையைக் கொண்டுள்ள திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், குருநாகல், புத்தளம், அநுராதபுரம், பொலன்னறுவை ஆகிய வறட்சியினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வாழும் பெண்களுக்கான கடன் நிவாரணத்தை வழங்குவதற்கு 2018 ஜூலை 24 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

பெண்களுக்கு வீடு வீடாகச் சென்று நுண்நிதிக் கடன்களை வழங்கும் வழிமுறையினை கொண்டு நடாத்தும் நுண்நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன்களுக்கு நூற்றுக்கு 40 தொடக்கம் 220 சதவீதம் வரை வருடாந்த வட்டி அறவிடப்படுகின்றது. அவதானம் மிக்க பொருளாதார செயற்பாடுகள் மற்றும் நுகர்வு நடவடிக்கைகளுக்காகவும் வழங்கப்படும் இந்த கடன் காரணமாக கிராமிய மட்டத்தில் கடன் பெறுபவர்கள் கடன் என்னும் சிக்கல்களுக்கு ஆளாகியுள்ளதோடு தற்போது இது கடுமையான பிரச்சினையொன்றாக மாறியுள்ளது. இதற்கு கூடுதலாக முகங்கொடுத்துள்ள வரட்சியினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பெண்களை இந்த கடன்களிலிருந்து விடுவித்து கொள்வதற்கு  ‘Enterprise Srilanka’  நிகழ்ச்சித்திட்டத்துக்கு ஒருங்கிணைவாக கடன் சலுகை நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கே அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

இதன்படி 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், அமைச்சால் அடையாளப்படுத்தப்பட்ட வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வசிப்பவர்கள், ஆரம்ப மூலதனம் ரூபா 100,000 அல்லது அதனைவிட குறைந்ததான கடன் ஒன்றினை நிதிக் கம்பனி அல்லது நுண்நிதி நிறுவனமொன்றிலிருந்து பெற்றிருப்பதுடன் நிலுவைக் காலப்பகுதியானது, 2018 ஜூன் 30 ஆம் திகதியன்று ஆகக் குறைந்தது தொடர்ச்சியாக 3 மாத காலமாக இருத்தல் வேண்டும் போன்ற தகைமைகளுடன் மேற்குறிப்பிடப்பட்ட மாவட்டங்களிலிருந்து 45,139 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டன. இதற்காக 2019 ஆம் ஆண்டில் 500,000,000 ரூபாவினை நிதி அமைச்சு ஒதுக்கியிருந்ததுடன் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளிலும் இத்தொகையினை ஒதுக்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இருப்பினும் நுண்நிதிக் கடனை தள்ளுபடி செய்வதற்காக நிதி அமைச்சினால் வவுனியா மாவட்டத்துக்கு 2018 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட 85.5 மில்லியன் ரூபாவுக்கு என்னவானது என்பது தொடர்பில் எவ்வித ஆவணங்களும் காணப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

வடக்கில் 56 இற்கும் மேற்பட்ட குடும்பப் பெண்கள் நுண்நிதி நிறுவனங்களின் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டிருந்த நிலையில், பாராளுமன்றத்தின் அங்கீகாரம் பெறப்பட்டு நிதி அமைச்சிற்கு 1,414 மில்லியன் ரூபா நுண்நிதிக் கடன் தள்ளுபடிக்காக ஒதுக்கப்பட்டு மாகாண ரீதியாக பிரித்து வழங்கப்பட்டிருந்தது. அந்தவகையில் வவுனியா மாவட்டத்துக்கு 85.5 மில்லியன் ரூபா நிதி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பப் பெண்களின் கடன்களை தள்ளுபடி செய்வதற்காக எவ்விதமான ஆவணங்களும் மாவட்ட செயலகத்தில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலும் நுண்நிதிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, பயனாளிகளின் பெயர் விபரங்கள் மற்றும் நுண்நிதி நிறுவனங்களின் பெயர் விபரங்கள் எதுவும் தங்களிடம் இல்லையென மாவட்ட செயலகத்தால் குறிப்பிடப்பட்டுள்ளதாகவே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலை காரணமாக நிதி நிறுவனங்கள் கடன்பெற்ற குடும்பப் பெண்களை தொடர்ந்து வற்புறுத்தி வருவதாகவும், கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தால் அதன் விபரங்கள் ஏன் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மாவட்ட செயலகம் அறிவிக்கவில்லை என்பதுடன், அரசு வவுனியா மாவட்டத்துக்கு ஒதுக்கிய 85.5 மில்லியன் ரூபாவுக்கு என்ன நடந்தது என்பதுவே பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையாகவிருக்கின்றது. இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக வவுனியா அரசாங்க அதிபர் பணிமனையிடம்  (GA/VA/EB/05/RTI/01) தகவல் கோரியிருந்த நிலையில், வவுனியா மாவட்டத்தில் நுண்நிதிக் கடனால் பாதிக்கப்பட்டோர் தொடர்பான விபரங்கள் தம்மிடம் இல்லையெனவும் வவுனியா மாவட்டத்தில் நுண்நிதி கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பான தகல்களும் தம்மிடம் இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் 2018 ஆம் ஆண்டு நிதி அமைச்சினால் வழங்கப்பட்ட நிவாரணத்தின் மூலம் 85.5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாகவும் இதன்மூலம் 5675 பயனாளிகள் பயனடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. நிதி அமைச்சினால் வழங்கப்பட்ட நிதிக்கான பயனாளிகள் அந்தந்த கூட்டுறவுச் சங்கங்களின் அங்கத்தவர்களாய் இருப்பவர்களுக்கு, அந்தந்த கூட்டுறவுச் சங்கங்களினால் தெரிவு செய்யப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் நுண்நிதி நிறுவனங்களினால் வழங்கப்பட்ட கடனுக்கும் கூட்டுறவு சங்கத்திற்கும் எவ்விதமான தொடர்புகளும் இல்லையென்பதுடன் அவ்வாறான எந்த நிதியும் நிதி அமைச்சினால் ஒதுக்கப்படவில்லையென்பதை வடக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர் அலுவலகம் உ றுதிப்படுத்தியுள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் 45,139 பெண்களின் செலுத்தப்படாத நுண்நிதிக் கடன் ரூபா 1.25 பில்லியனுக்கும் அதிகமான தொகையை அரசாங்கம் உள்ளீர்த்துக் கொண்டுள்ளது. அதேவேளை கடன் வழங்கும் கம்பனிகள் இந்தக் கடன்கள் தொடர்பான 141.41 மில்லியன் ரூபா பெறுமதியான வட்டிக் கொடுப்பனவுகளை இரத்துச் செய்துள்ளன என்று நிதி அமைச்சின் 2018 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சின் யோசனையின் கீழ் 37 நுண்நிதி நிறுவனங்களும் நிதிக் கம்பனிகளும் தமது உரிமைக்கோரல்களை சமர்ப்பித்திருந்தன. மூலதனம் மற்றும் வட்டி என்பனவற்றை உள்ளடக்கியதாக இரத்துச் செய்யப்பட்ட கடன் தொகை தொடர்பான யோசனைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இரத்துச் செய்யப்பட்ட மூலதனத்தை திரும்ப வழங்குவதற்கான உறுதிப்பாட்டை திறைசேரி கொண்டிருந்தது.

3 வருடங்களுக்குள் சமமான அல்லது அரைவருட தவணைக்கட்டனமாக வழங்குவதென தெரிவிக்கப்பட்டது. கடன்களுக்கான வட்டியை இரத்துச் செய்வதால் ஏற்பட்ட இழப்பை கடன் வழங்கியவர்கள் பொருத்துக் கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. பாரம்பரியமாக நுண்கடன்களை வழங்கும் அரச சார்பற்ற அமைப்புகள், அபிவிருத்திக்கான கருவியாக இதனைச் செய்யும் அமைப்புகள் கூட இதற்கு தன்னை முன்னிறுத்தியிருந்தன. நிதி அமைச்சின் வருடாந்த அறிக்கையின் பிரகாரம் நுண்நிதி முறையானது கிராமப் பகுதிகளில் நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு அதிகளவுக்கு முக்கியமான மாதிரியாக காணப்படுகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தொழிற்றுறை கடந்த சில வருடங்களாக அதிகளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது. இலங்கையின் கிராமப்புற சமூகங்கள் மத்தியில் வறுமையை குறைப்பதற்கு செயற்பாட்டுத் திறன் கொண்ட கருவியாக இது இருந்தது. கிராமப்புற வளர்ச்சிக்கு முக்கிய பங்கை வழங்குவதால் அவ்வாறு கருதப்பட்டது.

குருநாகல் மாவட்டத்தில் 10,999 கடன்கள் பதிவாகியுள்ளன. மொத்தம் இரத்துச் செய்யப்பட்ட கடனில் இது 24 வீதம் ஆகும். கடன் நிவாரணத் திட்டத்தின் கீழ் அனுகூலமடைந்த பெண்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் புத்தளம், அம்பாறை மாவட்டங்களிலேயே அதிகளவுக்கு காணப்படுகின்றது. கடந்த வருடம் நுண்நிதித்துறைக்கு கடனாக 76 பில்லியன் ரூபாவை வங்கிகள் வழங்கின. அதில் 47 பில்லியன் ரூபாவை சணச வங்கி வழங்கியது. நுண்நிதிக் கடன்கள் அதிக வட்டி வீதத்தில் சிறிய கடன் தொகையாக பெண்களுக்கு அவர்களின் வீட்டு வாசலுக்கு சென்று வழங்கும் உபாயத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டது. அதிகளவு நெருக்கடியுள்ள சிறிய விவசாய நடவடிக்கைகள், பொருளாதார நடவடிக்கைகள், நுகர்வுக்கான நோக்கத்திற்கும் இக்கடன் வழங்கப்பட்டிருப்பதை அறிக்கைகள் காண்பிக்கின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2018 ஆம் ஆண்டு நுண்கடன் காரணமாக 37 பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் திருமதி செல்வி மனோகர் தெரிவித்திருந்தார். இந்த ஆண்டு (2018) 37 பெண்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்கொலை செய்துள்ளதுடன் 163 கணவன்  மனைவிகள் நீதிமன்றம் சென்று விவாகரத்து பெற்றுள்ளனர். 300க்கும் அதிகமான தாய்மார் தமது பிள்ளைகளைப் பிரிந்து வெளிநாடுகளுக்கு தொழிலுக்காகச் சென்றுள்ளனர். இவற்றுக்கு முக்கிய காரணம் நுண்கடன் பிரச்சினையே காணப்படுவதாக நாம் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் தெரிய வந்திருப்பதுடன் தமிழ் கிராமங்களை இலக்கு வைத்தே நுண்நிதி நிறுவனங்கள் செயற்படுவதாகவும் ஒரு சில பெண்கள் 17 நுண்நிதிக்கடன்களை பெற்று திருப்பிச் செலுத்தி வருவதாகவும் தெரிவித்திருந்தார். அந்தளவுக்கு நுண்நிதிக் கடன் நிறுவனங்கள் மக்களின் வறுமையை சாதகமாக்கிக்கொண்டு செயற்பட்டுவருவதை கண்டறிந்து கொண்டாலும்கூட அவற்றினை தவிர்ப்பதற்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற நிவாரணங்கள் முழுமையாக சென்றடைகின்றதா என்பது தொடர்பாக அதிகளவுக்கு சந்தேகங்கள் காணப்படுகின்றன.

வவுனியா மாவட்டத்தில் நுண்நிதிக் கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையாக நிதி அமைச்சின் நிவாரணங்கள் சென்றடைந்தனவா என்பது தொடர்பில் அறிந்து கொள்வதற்கு எவ்விதமான ஆதாரங்களும் விபரங்களும் இல்லையென வவுனியா மாவட்ட செயலகம் அறிவித்திருப்பதானது, அதிகாரிகளின் அசமந்தப்போக்கினையும் மக்களுக்கு நிவாரணங்கள் முறையாக கிடைக்கப் பெறாமையினையுமே எடுத்துக் காட்டுகின்றது. சில பெண்கள் பல நுண்நிதி நிறுவனங்களிடமிருந்து மூன்று அல்லது நான்கு தடவைகள் கடன்களை பெற்றுள்ளனர். இதனால் நிலுவையிலிருக்கும் தவணைக்கட்டணங்களுக்குப் பதிலாக “பாலியல் சலுகைகள்’ கோரப்படுகின்றன. சிலர் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு சிறுநீரகங்களையும் விற்பனை செய்ய முயற்சித்திருப்பதையும் ஐ.நா. நிபுணர் குழு கடந்த வருடம் சுட்டிக்காட்டியிருந்தது. இலங்கையிலுள்ள 84 வீதமான பெண்கள் நிதி முகாமைத்துவம் தொடர்பில் அறியாதவர்களாகவும் நிதி தொடர்பான பிரச்சினைகளாலும் அவதிப்படுகின்றனர். நுண்நிதிக் கடன் வழங்கும் நிறுவனங்களில் அங்கத்தவர்களாக இருப்போரில் 90 வீதமானோர் பெண்களாகவே இருப்பதாகவும் அவ்வறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

கடன்களை பெறுகின்ற வாடிக்கையாளர்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்குரிய இயலமையை கொண்டிருக்கின்றாரா என்பது தொடர்பாக நுண்நிதி நிறுவனங்களும் ஊழியர்களும் கவனம் செலுத்துவதில்லை. அவ்வாறு தெரிந்தாலும்கூட அப்பிரதேசங்களில் இயங்குகின்ற ஏனைய நுண்நிதி நிறுவனங்களின் போட்டிகளை சமாளிப்பதற்காகவும் ஊழியர்கள் மாதாந்தம் அடைய வேண்டிய கடன் வழங்கல் இலக்கினை அடைந்து கொள்வதற்காகவும் கடனை திரும்ப செலுத்தமுடியாத நிலையிலிருக்கும் வறுமையானவர்களுக்கும் கடன்கள் வழங்கப்படுகின்றன. இதுவே பின்னர் கடன் பெற்றவர்களை பாரிய சிக்கலுக்கு முகம் கொடுக்க வைக்கின்றன. அத்துடன் வங்கிகளின் அடர்த்தியானது, ஒரு இலட்சம் மக்களுக்கு எத்தனை வங்கிகள் என்ற அடிப்படையிலேயே கணிக்கப்படுகின்றது. அந்த வகையில் 2009 ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்தில் 9.9 ஆக இருந்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டில் 118 வீதம் வளர்ச்சியடைந்து 21.6 ஆக அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மேல் மாகாணத்தில் ஒரு இலட்சம் மக்களுக்கு  இருக்கும் வங்கிகளும் நிதி நிறுவனங்களையும் விட அதிகமாக வட மாகாணம் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

/ Nov

Share the Post

Comments

No comment yet.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *