Skip links

மத்திய அதிவேக வீதி நிர்மாணிப்பு

நியாயமற்ற தாமதம்

கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலாக, நாட்டின் போக்குவரத்து மார்க்கங்களுக்கான முக்கியத்துவம் வெகுவாக உணரப்பட்டுள்ளதால், தேர்தல் விஞ்ஞாபனங்களில் கூட, வீதி அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகத் தனி அத்தியாயங்கள் காணப்படுகின்றன.

இவ்வாறு மக்களுக்கு, எதன் மீதான தேவை அதிகம் காணப்படுகின்றதோ, அதை இனம் கண்டுகொண்டு, அதைப் பூர்த்தி செய்யும் திட்டங்களை ஆரம்பித்து, அதன் மூலம், பல பித்தலாட்டங்களை மேற்கொள்ளும் நிலைமை இன்றுவரை நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது. இவ்வாறு மக்கள் அதிகம் நாட்டம் கொண்டுள்ள, அதிவேக வீதிகளும் தேர்தல் காலங்களில் முக்கியப் பேசுபொருளாகி விடுகின்றன.

இவ்வாறாக, அதிவேக வீதிகள் மக்களுக்குப் பயன்தருவனவாக இருந்தாலும், அந்த வீதிகளுக்கான செலவு என்ற பேரில், மக்கள் பணம் எந்தளவு விரயம் செய்யப்படுகின்றது என்பது இரகசியமாகவே இருந்துவிடுகிறது. அவ்வாறான, இரகசியங்களை உடைக்கும் ஆவணங்களாகக் கணக்காய்வு அறிக்கைகளே உள்ளன.

அதன் அடிப்படையில், 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் 19 ஆம் திகதி, நடைபெற்ற பொது முயற்சிகள் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் பணிப்புரைக்கமைய, கணக்காய்வாளர் தலைமை அதிபதி எச்.எம். காமினி விஜேசிங்ஹவால், 2018ஆம் ஆண்டு டிசெம்பர் 28ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கையை ஆராயும் போது, மத்திய அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளில் காணப்படும் தாமதப்படுத்தல்கள் நியாயமற்றவை எனத் தெரியவருகிறது.

நோக்கம்

வீதி அபிவிருத்தி அதிகார சபையால் 2007 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட பெருந்தெருக்கள் பாரிய திட்டத்தின் பிரகாரம், மேற்கொள்ளப்பட்ட பிரதான வீதி அபிவிருத்திச் செயற்றிட்டங்களுக்கு மத்தியில், கொழும்பு  கண்டி அதிவேக வீதி, கொழும்பு  யாழ்ப்பாணம் அதிவேக வீதி ஆகியவற்றையும் நிறுவுவதற்கான திட்டங்கள் குறித்து ஆராயும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இவ்வாறு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையில் இல்லாவிட்டாலும் 1990ஆம் ஆண்டிலிருந்து 2012 ஜூலை மாதம் வரை கொழும்பு கண்டி அதிவேக வீதியை நிர்மாணிக்கும் குறிக்கோள்களுடன் முகாமைத்துவ மட்டத்திலான முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டே வந்துள்ளன.

பின்னர், 2012 ஆம் ஆண்டு இறுதியிலிருந்து 2015 ஜூலை வரை, கொழும்பு  கண்டி, கொழும்பு யாழ்ப்பாணம் ஆகிய அதிவேக வீதிகளை நிர்மாணிக்கத் தீர்மானிக்கப்பட்டதோடு, அதை வடக்கு அதிவேக வீதியாகப் பெயரிட்டு, எந்தர முல்லையிலிருந்து மீரிகம வரைக்குமான அதிவேக வீதி நிர்மாணப் பணிகளை முதற்கட்டமாகவும் மீரிகமவிலிருந்து குருநாகல் வரை இரண்டாவது கட்டமாகவும் கண்டியை இணைக்கும் வீதியின் நிர்மாணப் பணிகளுக்கான சாத்தியவள ஆய்வு ஆலோசனை சேவைகளைப் பெறுவதற்கான ஒப்பந்தக்காரர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

மேற்குறித்த பணிகள் முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில், 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து இந்த அதிவேக வீதியானது, மத்திய அதிவேக வீதியெனப் பெயரிடப்பட்டு, கடவத்தையிலிருந்து தம்புளை வரை மூன்று கட்டங்களாகக் கண்டியை இணைக்கும் வீதியை நிர்மாணிப்பதாகவும் அதற்கான சாத்தியவள ஆய்வைப் பெற்றுக்கொள்வது தொடர்பான தீர்மானங்களும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

சாத்தியவள ஆய்வு பெறுதல்

பெருந்தெருக்கள் வீதி அபிவிருத்தி அமைச்சின் கீழ் அமுல்படுத்தப்படுத்தபடும் வகையில், வீதி அபிவிருத்தி அதிகார சபையால் 2007 – 2017 வரையான காலப்பகுதிக்காகத் தயாரிக்கப்பட்ட பெருந்தெருக்கள் பாரிய திட்டத்தின் பிரகாரம், வடக்கு அதிவேக வீதியை நிர்மாணிப்பதாகத் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

மேலும், 1990 ஆம் ஆண்டிலிருந்தே மத்திய மாகாணத்துக்கு அதிவேக வீதியை நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்ததை மேற்படி தீர்மானங்கள் உறுதி செய்வதுடன், தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட போது, அவற்றுக்குரிய தேசிய கொள்கையை அமுல்படுத்தாமையின் காரணமாக, நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நட்டம் எவ்வளவு என்பதை மதிப்பீடு செய்யமுடியாதுள்ளதாகக் கணக்காய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

2014 டிசெம்பர் 31 ஆம் திகதி வரை, ‘ஸ்மெக்’ நிறுவனத்துக்கு 1,759 ரூபாய் மில்லியனும் அந்த நிறுவனத்தின் அறிக்கை, ஏற்றுக்கொள்ளக் கூடிய நிலையில் இல்லாததன் காரணமாக, இது சம்பந்தமாகப் பல்வேறு ஆய்வுகளுக்காக வெளி நிறுவனங்களுக்கு 65 மில்லியன் ரூபாயும் செலுத்தப்பட்டிருந்தும் இறுதிச் சாத்திய வள ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கவில்லை என்பதும் கணக்காய்வின் போது தெரியவந்துள்ளது.

அதேபோல், கணக்காய்வுத் திகதி வரையும் அதிவேக வீதிகளைத் தெளிவாக இனங்கண்டு, மதிப்பீட்டைத் திருத்தம் செய்ய முடியாத நிலைமையின் கீழ், அவற்றுக்குரிய கேள்வி ஆவணங்கள் தாயாரிக்கப்பட்டிருக்கவில்லை.

அதனைடுத்து, முதலாம் கட்டத்துக்காகப் பொறியியலாளர் மதிப்பீட்டுக்குக் கிடைத்த அங்கிகாரம், அது அங்கிகரிக்கப்பட்ட திகதி, அந்த மதிப்பீட்டைத் தயாரித்த உத்தியோகத்தர்களின் உத்தியோகபூர்வ முத்திரைகள் ஆவணங்களில் பொறிக்கப்பட்டு இருக்கவில்லை.

மத்திய அதிவேக வீதியின் 01,02,03 ஆம் கட்டங்கள் தொடர்பாக ஆலோசனைக் கம்பனி, ஒப்பந்தக் கம்பனியைத் தெரிவு செய்யும் நடைமுறை, 2006 ஆம் ஆண்டு அரசாங்க பெறுகை வழிகாட்டிக் கோவையின் 1.1 ஆம் பிரிவுக்கு முரணாக அமுல்படுத்தப்பட்டு இருப்பதுடன், போட்டி விலை முறைமையைக் கடைப்பிடிக்காததன் காரணமாக 2006 ஆம் ஆண்டு அரசாங்க பெறுகை வழிகாட்டிக் கோவையின் 1.2.1 ஆம் பிரிவுக்கும் முரணாகவே இத்திட்டம் காணப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் எதிர்ப்பை வெளியிட்டிருந்ததால், கடைப்பிடிக்கப்பட்டிருந்த போட்டிக் கேள்வி நடைமுறை நிறுத்தப்பட்டு, அதற்குப் புறம்பாக அமைச்சரின் அமைச்சரவை விஞ்ஞானத்தில் குறிப்பிடப்பட்டவாறு, கம்பனியால் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கை மனு தொடர்பாக,‘Fujita’ நிறுவனத்துடன் கலந்தாலோசிப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டமை பெறுகை வழிகாட்டிக் கோவைக்கு, முரணானதாகவே காணப்பட்டுள்ளது.

‘Fujita’ நிறுவனத்தின் கேள்வி நிராகரிக்கப்பட்டிருந்த போதிலும், அதற்கு முரணாக அந்த நிறுவனத்துக்கு பெறுகையை வழங்க தகைமை பெற்ற ‘Taise’ கம்பனியுடன் இணைந்து கொள்வதற்கு, அங்கிகாரத்தைப் பெற்றுக்கொள்ளுதல், அதற்குப் பலவந்தப்படுத்துதல் உள்ளிட்ட செயற்பாடுகளும் பெறுகை விதிகளுக்குப் புறம்பாகவே இடம்பெற்றுள்ளன.

செலவு

சாத்திய வள ஆய்வுக்கு சுவீடன் அரசாங்கம், அந்நாட்டு சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்தால் வழங்கப்பட்ட 119 மில்லியன் ரூபாயில், 85.1 மில்லியன் ரூபாய், வீதி அபிவிருத்தி அதிகார சபையால் செலவு செய்யப்பட்ட விதம் தொடர்பாகக் கணக்காய்வுக் குழுவுக்கு விளக்கமளிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், அமைச்சரவை அங்கிகாரத்துடன் நிறைவு செய்யப்பட்டுள்ள, மலேசிய தனியார் நிறுவனமொன்றுடன் மேற்கொண்ட உடன்படிக்கை, அதனுடன் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களும் சமர்பிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த அதிவேக வீதிகள் ஆரம்பத்தில் நான்கு தடங்களைக் கொண்டவையாக நிர்மாணிக்கப்பட்டு, பின்பு ஆறு தடங்களைக் கொண்டவையாக விஸ்தரிக்கப்பட்டுவதாகத் தீர்மானிக்கப்பட்டு இருந்தது.

இவ்வாறிருக்க, 2015 ஆம் ஆண்டு ஜூலை ஆறாம் திகதி உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தின் மூலம், வடக்கு அதிவேக வீதியாக அறியப்பட்ட வீதி, மத்திய அதிவேக வீதியாகப் பெயரிடப்பட்டு, தேசிய முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய செயற்றிட்டமாகக் குறிப்பிடப்பட்டு, அதை விரைவாக ஆரம்பிப்பதற்காக, 2015 ஆண்டு ஜூலை எட்டாம் திகதி அங்கிகாரம் பெறப்பட்டிருந்தது.

மேலும், 2015 ஆம் ஆண்டு ஜூலை எட்டாம் திகதிய அமைச்சரவை அங்கிகாரத்தின் பிரகாரம், மத்திய அதிவேக வீதியின் சாத்திய வள ஆய்வு மற்றும் பொதுஹெரவிலிருந்து கலகெதர வரையான இணைப்பு வீதியின் நிர்மாணத்துக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதி நடவடிக்கைகள் இடம்பெறுவதுடன், வீதியின் முதலாவது கட்டமாகக் கடவத்தையிலிருந்து மீரிகம வரையும் இரண்டாவது கட்டம் மீரிகமவிலிருந்து குருநாகல் வரையும் மூன்றாவது கட்டம் குருநாகலிலிருந்து தம்புள்ள வரையும் என மூன்று கட்டங்களாக அமைக்கப்படவுள்ளதுடன் அதற்கான தனித்தனி முகாமைத்துவ பிரிவுகளும் நிறுவப்பட்டன. 2012 ஆம் ஆண்டின் இறுதி வரை இக்கட்டங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட மொத்தச் செலவு ரூபாய் 284 மில்லின் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நிதிவழங்குதல்

2003 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் திகதிக்கான அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம், கொழும்பு – கண்டி அதிவேக வீதி செயற்றிட்டத்தை, மலேசியா அரசாங்கத்தின் உதவியுடன் ஆரம்பிக்க அங்கிகாரம் பெறப்பட்டதற்கமைய, 2003 ஆம் ஆண்டு செப்டெம்பர் 10 ஆம் திகதி, இலங்கை – மலேசிய அரசாங்கங்கள் ஒப்பந்தத்தில் கைசாத்திட்டுள்ளன.

அதற்கமைய, சுவீடன் ஆலோசனை நிறுவனங்களான ‘யூரோ இன்ப்ரா குருப்’ நிறுவனத்தால், அதிவேக வீதியின் நீளம் 98 கிலோ மீற்றர் என சாத்திய வள ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், 2005 மே 30 ஆம் திகதி வரை, வீதியை இனங்கண்டு கையகப்படுத்த வேண்டிய காணிகளின் அளவு அறியப்பட்டிருக்கவில்லை எனக் கணக்காய்வின் போது தெரியவந்துள்ளது.

மேலும், அதற்கு இடைப்பட்ட காலத்தின் போது, இச் செயற்றிட்டத்தைத் தனியார் முதலீட்டின் அடிப்படையில் மேற்கொள்வதற்கு 2007 ஜூன் ஆறாம் திகதி அமைச்சரவை அங்கிகாரம் வழங்கி இருந்தமையும் மலேசிய அரசாங்கத்துடன் கையெழுத்திட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் காலம், 2007 ஆம் ஆண்டு செப்டெம்பர் 10 ஆம் திகதி வரையும் பின்னர், 2008 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் திகதி வரையும் இரண்டு சந்தர்ப்பங்களில் நீடிக்கப்பட்டிருந்தது.

கொழும்பு கண்டிஅதிவேகவீதி

நிர்மாணத்துக்குக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக, 284 மில்லியன் ரூபாய் செலவென வீதி அபிவிருத்தி சபையால் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், வீதி அபிவிருத்தி அதிகார சபையால் மதிப்பீடு செய்யப்படாத 85.1 மில்லியன் ரூபாய் உள்ளடங்கலாக மொத்தமாக 369.1 மில்லியன் ரூபாய் கணக்கில் கொண்டுவரப்பட்டிருக்கவில்லை எனவும் கணக்காய்வு அறிக்கையின் ஊடாக அறியப்பட்டுள்ளது.

பெறுகை நடைமுறைகள்

மத்திய அதிவேக வீதியை நான்கு பகுதிகளாகப் பிரித்து, நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதுடன் தேவையான நிதியை உள்நாட்டு வங்கிக் கடன் மூலம் வழங்குவதற்கும் அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்திருந்தது. ஆனாலும் அதற்குரிய திகதி கண்ணாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கவில்லை.

மூன்றாவது கட்டம்

2013 ஆம் ஆண்டு மே 28 ஆம் திகதி வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும் சீன கம்பனிக்கும் இடையே சீனாவில் கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம், வடக்கு அதிவேக வீதியின் மூன்றாவது பகுதியை அம்பேபுஸ்ஸவிலிருந்து கண்டி வரை (46 கி.மீ) நிர்மாணித்தல், நிதி வழங்கல் என்பவற்றுக்காக China Metallurdical Group Corporation (MCC) என்ற நிறுவனத்துடன் பெருந்தெருக்கள் துறைமுகங்கள் அமைச்சின் செயலாளரால் 2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் 17 ஆம் திகதி, மேற்படி புரிந்துணர்வு ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டுள்ளது.

அதையடுத்து, மேற்படி ஒப்பந்தத்தை இரகசியமாகப் பேணவும் காணி மீட்புக்காகவும் 18 மாத கால அவகாசத்தை வழக்குவதற்கும் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

நான்காவது கட்டம்

பின்பு, 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி அதிவேக வீதியைப் பொதுஹெரவிலிருந்து ரம்புக்கன வரை நிர்மாணிக்கவும் பொதுஹெர- ரம்புக்கன உள்ளக இடமாறல்களை உள்ளடக்கி, நான்காவது பகுதியின் 3.5 கிலோ மீற்றர்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் 48,200 மில்லியனுக்கு MCC நிறுவனத்துக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கப்பட்டிருந்ததுடன் 2014 நவம்பர் 17 ஆம் திகதி வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும் MCC நிறுவனத்துக்கும் இடையே உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தது.

அதற்கமைய சீன EXIM வங்கியிடமிருந்து கடனைப் பெற்றுத் தீர்மானிக்கப்பட்டிருந்ததுடன் இந்நிலையில், சீன நிறுவனம் உடன்படிக்கைக்கு அமைவாக, குறித்த கடனை வழங்கத் தவறியதால் அந்த நிறுவனத்துக்கு முன்பு வழங்கப்பட்ட செலவீனங்களை அந்நிறுவனம் மீள செலுத்தியிருக்காததுடன் இந்த வீதித்திட்டத்தின் முதற் கட்டமான, கடவத்தை – மீரிகம திட்டத்துக்காக குறித்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள 158,386 மில்லியன் ரூபாய் பெறுகை நியதிகளுக்கு முரணான வகையில் வழங்கப்பட்டுள்ளதாகக் கணக்காய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

பின்னர், அந்த உடன்படிக்கையில் ஏழு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 2018 நவம்பர் 15 ஆம் திகதி வரை கால நீடிப்புப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதோடு, அதற்கான கொடுப்பனவுகள் அந்த நிறுவனத்துக்கு எவ்வாறு வழங்கப்பட்டது என்பது தொடர்பில் உரிய விளக்கம் கிடைக்கவில்லை எனவும் கணக்காய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

அத்துடன், அமைச்சரவை சரியான தீர்வை எடுப்பதற்குரிய தரவுகளை வழங்க நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்றும் பெறுகை செயற்பாடுகளைச் சிக்கனமாக முன்னெடுக்க வேண்டுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.   சிறந்த தொடர்பாடலை ஏற்படுத்துவதுடன் தேவையற்ற கால தாமதத்தைக் குறைப்பது தொடர்பாக அவதானம் செலுத்த வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கணக்காய்வில் கண்டறியப்பபட்டவை

முறையான சாத்தியவள ஆய்வை மேற்கொள்ளாமையும் திட்டங்களைத் தயாரிப்பதற்குப் போதியளவு காலம் வழங்கப்படாததால் மத்திய அதிவேக வீதியை நிர்மாணிக்கும் நடவடிக்கை நியாயமற்ற வகையில் தாமதித்துள்ளது.

பொறுப்புகூற வேண்டிய தரப்புகளின் தவறாக தீர்மானங்கள், நிர்மாணத்துக்கான செலவில் பெருமளவில் தாக்கம் செலுத்தியுள்ளன.

பெறுகை நடவடிக்கைகளின் போது, உயர்கல்வி பெருந்தெருக்கள் அமைச்சு, வீதி அபிவிருத்தி அதிகார சபை நிதி வெகுசனத் தொடர்பு அமைச்சின் செயற்றிட்ட அலுவலகம் ஆகிய நிறுவனங்களும் இதற்காக நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிலையான பெறுகைக் குழு ஏனைய தொடர்புபட்ட குழுக்களால் தொழில்சார் கடமைகளை நிறைவேற்றவில்லை எனவும் தெரியவந்துள்ளது.    சாத்தியவள ஆய்வு அறிக்கையைப் பயன்படுத்தாமையின் காரணமாக, இழக்கப்பட்ட நிதி தொடர்பாக உரிய தரப்புகள் பொறுப்புகூற வேண்டியது அவசியம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, எதிர்காலத்திலாவது தேர்தல் காரணங்களுக்காகவும் பிற காரணங்களுக்காகவும் போக்குவரத்துக் கட்மைப்புகளை நிறுவும் போது, மக்கள் பணத்தை வீணடிக்கும் எண்ணத்தைத் துறந்து உரிய தரப்புகள் செயற்படுமாயின் சிறந்தாகும்.

 

Leave a comment

This website uses cookies to improve your web experience.