Skip links

ஆரம்பகால சிறுவர் பராய அபிவிருத்தி திட்டம் உலகவங்கி நிதிக்கு நடந்தது என்ன?

உலகிலேயே மிகச்சிறந்த முதலீடாக ஆரம்பகால சிறுவர் பராய அபிவிருத்தி கருதப்படுகிறது. குழந்தைகளின் இந்த ஆரம்பக் கல்வியே எதிர்கால செயற்பாடுகளில் பாரிய தாக்கத்தைச் செலுத்துகிறது. இலங்கையிலும் இவ்வாறு முன்பள்ளிக் கல்விக்கு அதிகம் முக்கியத்துவம் தற்போது வழங்கப்பட்டுவருகிறது. ஆனால் மலையகத்தில் இதன் முக்கியத்துவம் மற்றும் தரம் என்பன எந்தளவுக்கு உயர்வு பெற்றுள்ளது என்பதற்கு விடைதேட வேண்டியுள்ளது. எவ்விதமான அடிப்படைப் பயிற்சிகளும் கல்வித் தகுதிகளும் இல்லாதவர்கள் முன்பள்ளி ஆசிரியர்களாக தோட்டப்புறங்களில் இருப்பதும் முறையான பள்ளிச் சூழல் அமையப்பெறாததும் மலையகத்தின் சாபக்கேடுகளாக இருக்கின்றன.

இதற்கு என்ன தீர்வு? பெருந்தோட்டங்களில் இயங்கும் முன்பள்ளிகள் மற்றும் சிறுவர் காப்பகங்கள் ஏன் அபிவிருத்தி செய்யப்படுவதில்லை என்பது தொடர்பாக நாம் ஆராய்ந்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சினை தொடர்பு கொண்டபோது பல விடயங்களை தெரிந்து கொள்ளக்கூடியதாக இருந்ததுடன் கடந்த சில வருடங்களாக இடம்பெற்று வருகின்ற ஊழல்கள் தொடர்பாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றது. 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு அமைவாக முன்பள்ளிகள் மாகாண சபைகளின் அதிகாரத்துக்கு உட்பட்டதாகவே இருக்கின்றன. சகல மாகாண சபைகளிலும் சிறுவர் அதிகார சபைகள் நிறுவப்பட்டிருக்கின்றன. இருப்பினும் இதில் எந்தவொரு பெருந்தோட்ட முன்பள்ளிகளும் பதிவு செய்யப்படவில்லை. இதனால் எப்போதும் ஒரே ஆசிரியர், ஒரே பாடத்திட்டம் என்ற நிலையிலேயே முன்பள்ளிகள் இயங்குகின்றன. இலங்கையில் 17,020 க்கும் அதிகமான முன்பள்ளிகள் இயங்கி வருகின்றன. ஆனால் அப்பள்ளி ஆசிரியர்கள் கடுமையான நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில் பெருந்தோட்டங்களில் முன்பள்ளிக் கல்வியினை அபிவிருத்தி செய்யும் நோக்கில் உலகவங்கியின் நிதியுதவியுடன் ஆரம்பகால சிறுவர்பராய அபிவிருத்தி திட்டம் (Early Childhood Development Project)2015 – 2020 ஆண்டுவரை 5 வருட காலப்பகுதிக்கு முன்னெடுக்கப்படுகின்றது. இத்திட்டத்துக்காக 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கை அரசாங்கத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டது. இதில் பெருந்தோட்டப் பிள்ளைகளுக்காக 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டிருப்பதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் எம்மால் தெரிந்து கொள்ள முடிந்தது. இதன் இலங்கைப் பெறுமதி 1812 மில்லியன் ரூபாவாகும். பெருந்தோட்டங்களிலுள்ள 5 வயதுக்குக் குறைவான முன்பள்ளி பிள்ளையொன்றுக்கு 27876 ரூபா ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

இப்பாரிய தொகையானது 7 செயற்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அவை இரண்டாக வகுக்கப்படுகிறது. ஒன்று கட்டிடங்கள் (Hardware Activities) சம்பந்தப்பட்டதாகவும் மற்றொன்று ஆசிரியர், கற்பிப்பவர், பிள்ளைகள், பெற்றோருக்கான பயிற்சி, வழிகாட்டல்கள் (Software Activities) தொடர்பானது. இலங்கை முழுவதும் 17,020 (உலகவங்கி) ஆரம்பகால குழந்தைப் பருவ அபிவிருத்தி நிலையங்கள் காணப்படுகின்றன. இங்கு 29,340 ஆசிரியர்கள் காணப்படுவதுடன் இவற்றில் 84 வீதமான நிலையங்கள் தனியாரின் முகாமைத்துவத்தின் கீழேயே செயற்படுகின்றன. இந்த 5 வருட திட்டத்தின் மூலம் மேலதிகமாக நாடு முழுவதும் 150,000 சிறுவர்களை புதிய நிலையங்களுக்குள் உள்வாங்க முடியும்.

இதில் முதல் பிரிவில் பெருந்தோட்டங்களில் முன்பள்ளிக் கல்வி நிலையம் இல்லையென்றால் புதிதாக கட்டிடமொன்றை அமைப்பதற்கு 65 இலட்சம் ரூபா ஒதுக்கப்படுகின்றது. முன்பள்ளியொன்று இருக்குமாயின் அதனை புனரமைப்புச் செய்வதற்கு 13.5 இலட்சம் ரூபாவும் புதிய கட்டிடமொன்று இருக்குமாயின் விளையாட்டு முற்றமொன்று அமைப்பதற்கு 4 இலட்சம் ரூபாவும் விளையாட்டு முற்றம் இருக்குமாயின் அதற்கு வேலி அமைப்பதற்கு 2.5 இலட்சம் வழங்கப்படுகின்றது. இரண்டாவது பிரிவில், சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் உள்ளவர்களுக்கு முறையான பயிற்சி வழங்கும் முறை காணப்படுகின்றது. இதில் பிரதான நோக்கமாக பிறநாடுகளில் வழங்கப்படுகின்ற முன்பள்ளிக் கல்விக்கான டிப்ளோமாவை இவர்களுக்கும் பெற்றுக் கொடுப்பதாக இருக்கின்றது. ஆனால் இங்கு சிறுவித்தியாசம் காணப்படுகிறது. பொதுவாக நகர்புறங்களிலுள்ள முன்பள்ளிகளில் 3 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளே அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் தோட்டபுறங்களிலுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் 6 மாத குழந்தைகள் முதல் சேர்க்கப்படுகின்றனர். அதனால் அதற்கேற்றாற்போல பாடநெறிகளோடு பயிற்சிகளும் வழங்கப்படும். அத்துடன் பெருந்தோட்டங்களிலுள்ள பெற்றோருக்கு முன்பள்ளிக் கல்வி தொடர்பான அறிவினை பெற்றுக் கொடுப்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருக்கின்றது.

ஆனால் உலக வங்கியினால் பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் தரமான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றனவா? என்பது தொடர்பாக விபரங்களை சேகரிப்பது சிரமமான காரியமாக விருந்தாலும் கிடைத்த தகவல்களில் பெருந்தோட்டப் பிள்ளைகளுக்கு எதிரான விடயங்களே முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. பிள்ளைகள் அதிகம் இருக்கும் இடங்களிலேயே சிறுவர் அபிவிருத்தி நிலையம் அமைக்கப்பட்ட வேண்டும். அவ்வாறில்லையெனில் பிள்ளைகளுக்கு இலகுவாக வந்து சேரக்கூடிய இடங்களிலேயே அமைக்கப்பட வேண்டும். கேகாலை மாவட்டத்தில் 5-6 பிள்ளைகள் இருக்கும் இடத்தில் கூட சிறுவர் அபிவிருத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 65 இலட்சம் ரூபா செலவளிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்துக்குள் 13 இலட்சம் ரூபாவைச் செலவளித்து தற்போதிருக்கும் சிறுவர் அபிவிருத்தி நிலையமொன்றை புனரமைப்புச் செய்திருக்கமுடியும். குறைந்த பிள்ளைகளைக் கொண்ட இடத்துக்கு 13 இலட்சம் ரூபா வேலைத்திட்டமே பொருத்தமானது. இதன் மூலம் மேலதிகமான நிதி வீண்விரயமாக்கப்பட்டுள்ளது. ஒரு தோட்டத்தில் 35 பிள்ளைகள் இருந்தாலே புதியகட்டிடம் கட்டப்பட வேண்டும்.

பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியத்தின் கொழும்பு தலைமைக் காரியாலயத்துடன் தொடர்புபட்டு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஹட்டன், நுவரெலியா, பதுளை, கண்டி, இரத்தினபுரி, கேகாலை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் பிராந்திய காரியாலயங்கள் அமைக்கப்பட்டு 7 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் அவர்கள் பெரும்பாலும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் வீட்டுத்திட்ட நிர்மாணிப்புகளிலேயே கவனம் செலுத்துகின்றனர். இவ்வேலைத்திட்டத்துக்காக மாதாந்தம் 270,000 ரூபா வாடகை செலுத்தி இரண்டு வாகனங்கள் (கஏ 2787 / கஏ 3072) வாடகைக்குப் பெற்றுக்கொள்ளப்பட்டன. பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வருடாந்தம் வாகனத்துக்கு மாத்திரம் 30 இலட்சம் ரூபாவினை செலவளிக்கின்றார். இந்த இரண்டு வாகனங்களில் ஒரு வாகனமே வேலைத்திட்டத்துக்காகப் பயன்படுத்தப்படுகின்றது. மற்றையது தனிப்பட்ட தேவைகளுக்காகவே பயன்படுகின்றது.

உலகவங்கியின் இந்தச் செயற்பாடுகளுக்காக பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியத்துக்கு திட்டப்பணிப்பாளராக ஏ.ஙி. வசந்த ஹேரத் நியமிக்கப்பட்டிருந்தார். 2018 ஜனவரி 2 ஆம் திகதி இவ்வேலைத் திட்டத்தினை அவர் பொறுப்பேற்றிருந்த பொழுது ட்ரஸ்ட் நிறுவனத்தின் செயற்பாடுகள் மந்தகதியிலேயே நகர்ந்து சென்றிருந்தன. 2017 ஆம் ஆண்டுச் செயற்பாடுகள் எவையும் பூர்த்தியடையாமலேயே இருந்தன. (அட்டவணை 1) பின்னர் 2018 ஆம் ஆண்டு இறுதிக்குள் 100 வீதம் செயற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

ஒரு மனிதன் பூரணமடைவதற்கு முதலாவது தேவையாக இருப்பது ஆரம்பக்கல்வியாகும். 8 வயது வரையே ஆரம்பக்கல்வி என உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் 0 – 5 வயது வரையே ஆரம்பக்கல்வியென இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இக்காலப்பகுதியிலேயே 85 வீதமான மூளை வளர்ச்சி ஏற்படுகின்றது. இக்காலப்பகுதியில் ஏதாவது குறைப்பாடுகள் காணப்பட்டால் அது அப்பிள்ளையின் எதிர்காலத்தையே பாதித்துவிடும். குழந்தை பராமரிப்பு நிலையமானது பிள்ளைகளை பார்த்துக் கொள்ளும் ஒரு இடமாக மாத்திரம் இல்லாமல், பிள்ளைகளின் அபிவிருத்திக்கும் உதவ வேண்டும்.

இச்சந்தர்ப்பங்களில் பிள்ளைகளின் சிறந்த கல்வியறிவுக்கு வழிசெய்யும் நோக்கில் ஆசிரியர்களுக்கு முன்பள்ளி டிப்ளோமா பயிற்சி நெறியை பெற்றுக் கொடுப்பதும் பிரதான நோக்கமாக இருக்கிறது. தரமான முன்பள்ளி டிப்ளோமாவானது 720 மணித்தியாலங்களைக் கொண்ட பயிற்சி நெறியாக அமைய வேண்டும். இதுவே தேசிய தொழிற் தகைமை ஆகும். ஆனால் பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியத்தால் 240 மணித்தியாலங்களில் பாடநெறி நிறைவு செய்யப்பட்டு, டிப்ளோமா வழங்கப்படுகிறது.

உலக வங்கியின் ஆரம்பகால சிறுவர் பராய அபிவிருத்தித் திட்டமானது. 2015 – 2020 ஆண்டு வரையான ஐந்து வருடங்களுக்கு மேற்கொள்ளப்படுகின்றது. 2020 – 2040 வரையில் உலக வங்கியால் வழங்கப்பட்ட இத்திட்டத்துக்கான கடன் தொகையினை திருப்பிச் செலுத்த வேண்டும். (அட்டவணை 2) ஆனால் பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியத்தில் இத்திட்டத்துக்கான நிரந்தர கணக்காய்வாளர்கள் கூட இல்லை. கடந்த 3 வருடங்களில் 6 கணக்காய்வாளர்கள் மாற்றப்பட்டிருக்கின்றனர்.

இது எதேச்சதிகார போக்கினை வெளிக்காட்டுவதாகவே அமைந்திருக்கின்றன. இதேவேளை மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு அமைச்சின் அனுசரணையில் டிகிரி சக்தி என்ற பிஸ்கட் தயாரிக்கப்பட்டும் அவை சுகாதார அமைச்சினால் தடைசெய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. பெற்றோருக்கு முன்பள்ளிக் கல்வி தொடர்பாக தெளிவுபடுத்தும் விடயங்களுக்காக பிராந்திய நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியானது முறையற்ற வகையிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மக்கள் தொடர்பாக போதிய செயற்பாட்டு அனுபவங்களை கொண்டுள்ள நிறுவனங்களே இச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அல்லது அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். ஆனால், இவ்வேலைத்திட்டம் நேரடியாகவே ட்ரஸ்ட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இடம்பெறுகின்ற முறைகேடுகள் பெருந்தோட்டங்களிலுள்ள எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை சீர்குலைக்கும் செயற்பாடாகவே அமையும். இவ்விடயம் தொடர்பாக ஏற்கனவே 2018/12/10 ஆம் திகதி ’தினமின பத்திரிகையில் கட்டுரையொன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை பெருந்தோட்ட மக்களின் நலன்களுக்கு முக்கியத்துவமளித்து செயற்படும் வகையிலான அதிகாரசபைகள் தோற்றம் பெறாமையும் பாரிய குறைபாடாகவே இருக்கின்றது. ட்ரஸ்ட் நிறுவனம் முற்றுமுழுதான அரச நிறுவனமாக இல்லை. அதேவேளை அதன் தலைமைத்துவம் பெருந்தோட்ட மக்ளின் மீது அக்கறை கொண்டதாகவும் இல்லை. பணத்துக்காகவும் ஏனைய சுகபோகங்களுக்காகவும் இயங்கும் இந்நிறுவனங்களுக்கு உலக வங்கியின் அபிவிருத்தித் திட்டங்கள் கிடைக்கின்றமை ஒரு சாபக்கேடு.

2015 அக்டோபர், 23 ஆம் திகதி இலங்கையின் நிதியமைச்சின் செயலாளரும் சர்வதேச அபிவிருத்தி சங்கத்தின் இலங்கை, மாலைதீவு பணிப்பாளருக்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட நிதி ஒப்பந்தத்தில் எப் (ஊ) பிரிவில் இத்திட்டமானது, ஊழலுக்கெதிரான வழிகாட்டல்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட வேண்டுமென்ற இணக்கப்பாட்டுடனேயே கைச்சாத்திடப்பட்டிருக்கிறது. ஆனால் அச்சரத்தினை மீறியே பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தினால் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. (தகவல் : நிதி உடன்படிக்கை – RTI)

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படுகின்ற 40 மில்லியன்களுக்குரிய வேலைத் திட்டங்களும் இவ்வாறு மோசடி நிறைந்ததாகவே காணப்படுகின்றது. மாகாணசபை அல்லது மாகாண அதிகார சபைகளின் ஒத்துழைப்பின்றி பிரதேச செயலக காரியாலயங்களில் இருக்கும் ஆரம்ப பிள்ளைக் கல்வி அதிகாரிகளுடன் தொடர்பை மேற்கொண்டு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால், இவ் அதிகாரிகளின் செயற்பாடுகள் மற்றும் பயிற்சிகள் பிறப்பிலிருந்து 5 வயது வரையான பிள்ளைகளின் போஷாக்கு பற்றியதாகவே இருக்குமே தவிர, கல்வி தொடர்பானதாக இருக்காது. எனவே, இது பொருத்தமில்லாத நடவடிக்கையாகவே இருக்கின்றது.

உலக சராசரியளவைவிட இலங்கை இளம்பராய சிறுவர் கல்விக்கு மிகக்குறைவாகவே செலவிடுகிறது. 2014இல் வெளியிடப்பட்ட உலக வங்கியின் அறிக்கையொன்று இலங்கையின் பொருளாதாரத்தில் கல்விக்காக செலவிடும் பொதுத் தொகையானது தெற்காசியாவிலேயே மிகக் குறைவானது என்பதோடு, உலக சராசரியளவை விட இலங்கை இளம்பராய சிறுவர் கல்விக்கு (உஇஉ)ஞூ குறைவாகவே செலவிடுகிறது என்பதையும் குறிப்பிட்டுக் காட்டியது. எனவே, இவ்வாறான அவல நிலையினை நீக்குவதற்காக உலக வங்கியினால் ஆரம்பகால சிறுபராய பராமரிப்பு அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியானது முறையாகக் கையாளப்பட்டிருக்கின்றதா என்பது ஆதாரங்களுடன் சம்பந்தப்பட்டவர்களால் வெளியிடப்படவேண்டும். இல்லையேல் வீணாக செலவழிக்கப்படுகின்ற ஒவ்வொரு 27,876 ரூபாவும் பெருந்தோட்டப் பிள்ளையின் கல்வி வளர்ச்சியையும் எதிர்காலத்தையும் பாதிப்பதாகவே அமையும்.

Leave a comment

This website uses cookies to improve your web experience.