Skip links

தனிவீட்டு திட்டம் இலவசமானதா?

மலையக பெருந்தோட்டப்பகுதிகள் இன்னும் முழுமையான அபிவிருத்தியினை  பெற்றுக்கொள்ளவில்லை.  ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள் வழங்குகின்ற வாக்குறுதிகளில் ஒரு சிலவே நிறைவேற்றப்படுகின்றன. அந்த வகையில் மலையக பெருந்தோட்ட மக்களுக்காக தேசிய அரசாங்கத்தால் மலைநாட்டுப் புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சினூடாக 7 பேர்ச் காணியில் சொந்த வீடுகளை அமைத்துக் கொடுக்கும் பசும்பொன் வீடமைப்புத்திட்டமும் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத்திட்டமும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.  ஆனால் அவற்றில் இடம்பெறுகின்ற முறைகேடுகளாலும், கட்சி அரசியலாலும்  பயனாளிகளுக்கு உரிய முறையில் வீடமைப்புத் திட்டம் கொண்டு சேர்க்கப்படுகின்றதா?

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் தோட்டத்திலுள்ள ஆறாம் இலக்க லயன் அறையானது (16 காம்பிராக்கள் ) முற்றாக தீக்கிரையாக்கப்பட்டது. இந்த 16 லயன் வீடுகளில் மொத்தமாக 21 குடும்பங்கள் வசித்து வந்திருக்கின்றனர்.  இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அண்மையிலுள்ள புளும்பீல்ட் தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டு  பின்னர் 16 தற்காலிக முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.  இவ்வாறு தீ அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சினால் தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பதாக வாக்களித்து வீடுகள் கட்டுவதற்கான இட ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

சீட்டுக் குலுக்கல் முறையிலேயே இவர்களுக்கான வீட்டு இலக்கங்களும் வழங்கப்பட்டிருந்தன.  கிராம சேவகர், நலன்புரி உத்தியோகத்தர், ட்ரஸ்ட் நிர்வாகிகளின் முன்னிலையிலேயே சீட்டுக் குலுக்கல் இடம்பெற்றிருந்தது.  இந்தக் குலுக்கலில் முதலாவது இலக்கம் யாருக்கு வந்தாலும் அதனைத் தோட்டத்தின் தொழிலாளர் தேசிய சங்கத் தலைவருக்கே வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இவ்வாறான அநீதிகளுக்குப் பிறகு வீட்டுத் திட்டம் 2017மே மாதம் 28 ஆம் திகதி பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டிருந்தது. தற்போது இவ்வீட்டுத்திட்டம் கையளிக்கப்பட்டு 19 மாதங்கள் கடக்கின்ற நிலையிலும் பல்வேறு பிரச்சினைகளுக்கு பயனாளிகள் முகம் கொடுக்க வேண்டிய நிலை காணப்பட்டிருந்தது.  ஆனால் வழங்கப்பட்டுள்ள வீடுகள் தரமற்றவையாகவும் ஒதுக்கப்பட்ட  தொகைக்கு பெறுமதியானதாகவும் இல்லை.  முழுமையாக வேலைகளும் பூர்த்தி செய்து கொடுக்கப்படவில்லை. பயனாளிகள் வீடுகளுக்கு குடிபுகுந்து ஒரு வருடங்கள் கடந்த நிலையிலேயே குடிநீர் முறையாக பெற்றுக்கொடுக்கப்பட்டது. அதற்கு முன்பாக 10 நாட்களுக்கு ஒருமுறையே தற்காலிக பவுஸர் மூலம் குடிநீர் தோட்ட நிர்வாகத்தினால் வழங்கப்பட்டு வந்திருந்தன.

அதேவேளை வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு 2018 ஆம் ஆண்டு இறுதியிலேயே மின்சாரமும் பெற்றுக்கொடுக்கப்பட்டது. அதுவும் பயனாளிகள் 19 ஆயிரம் ரூபா பணத்தினை செலுத்தியே அதனை பெற்றுக்கொண்டனர். இதை விடவும் மோசமான மற்றும் ஆபத்தான நிலையினை இங்கு வசிப்பவர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.  புதிதாக அமைக்கப்பட்ட தனிவீடுகளின் சுவர்களில் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன் தரைப்பகுதியும் பாரிய வெடிப்புக்களினால் தாழிறங்குவதை அவதானிக்க முடிந்தது.  அத்தோடு இத்தனி வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள சமையலறை மற்றும் தனியறை என்பன முழுமையான பூர்த்தி செய்து கொடுக்கப்படவில்லை.  அறைகளுக்கான கதவுகள், சீலிங் (Celing) என்பன பொருத்தப்படவில்லை.பாதை அமைப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் சிறிது தூரமே கொங்றீட் பாதைகள் இடப்பட்டுள்ளன. இவ்வாறானதொரு சூழலில் தனிவீட்டுத் திட்டம் காணப்படும் நிலையில் இவற்றை தரமான மற்றும் பாதுகாப்பான வீடமைப்பு என்று எவ்வாறு கருதமுடியும்.  இவ்வீடுகளை அமைக்க 5 லட்சம் ரூபா கூட செலவாகாது என பயனாளிகள் தெரிவிக்கின்றனர்.  அவ்வாறெனில் ஒதுக்கப்பட்ட மொத்த தொகைக்கும் என்னவானது.  இவ்வாறு தரமற்ற வீடுகளை அங்கீகரித்தது யார்? கட்டுமானப்பணிகளை மேற்கொண்டது யார்? என்பது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.  இவ்வீட்டுத்திட்ட திறப்புவிழாவுக்கு வருகை தந்திருந்த அமைச்சர் திகாம்பரம் நாடாவை வெட்டி விட்டு சென்று விட்டதாகவும் வீடுகளுக்குள் சென்று அதன் நிலைமைகளை அவதானிக்கவில்லையெனவும் இங்குள்ள மக்கள் குறைபட்டுக் கொள்கின்றனர்.

இவ்வீட்டுத் திட்டங்களுக்கு இடைத் தரகர்களாக செயற்படுபவர்களே இவ்வாறான தரமற்ற வீடுகள் உருவாகுவதற்கு காரணமாக இருக்கின்றார்கள்.  இவ்வீட்டுத் திட்டத்துக்கு அரசாங்கங்கத்தால் ஒதுக்கப்பட்ட முழுத் தொகையும் செலவளிக்கப்படவில்லை.  ஆனால் மேலதிகமாக பயனாளிகளிடமிருந்து பெருந்தொகையான பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இவை தொடர்பான விடயங்களை வெளியிடும் பட்சத்தில் நாம் அரசியல் ரீதியாக பழிவாங்கப்படுவோம் என்ற அச்சத்தில் இங்குள்ள மக்கள் இருந்துள்ளனர்.

இவ்வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா முதல் திறப்பு விழா வரை  பணம் வசூலிக்கப்பட்டிருப்பதோடு உடல் உழைப்பும் சுரண்டப்பட்டிருந்தது.  அடிக்கல் நாட்டு விழாவின் போது ஒவ்வொரு குடும்பத்தினரிடமிருந்தும் 1000 ரூபா பெறப்பட்டதுடன் வீட்டு நிர்மாணத்தின் போது தளம் வெட்டுவதற்காக 8000 ரூபாவும் மலசலகூட குழி வெட்டுவதற்காக 7000 ரூபாவும் வீடுகளுக்கு கல் நாட்டுவதற்காக 2200 ரூபாவும் நிலை நாட்டுவதற்காக 2000 ரூபாவும் பயனாளிகளினால் செலவு செய்யப்பட்டுள்ளது.  ஆனால் இவ்வளவு  செலவுகளையும் இழப்புகளையும் சந்தித்து முழுமையான தரமான வீட்டை பெற்றுக் கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலையினை பயனாளிகள் சந்தித்துள்ளனர்.

இதுவொரு ஆரம்பமாகவே இருக்கின்றது. இன்னும் கட்டி முடிக்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் மற்றும் கட்டப்படவிருக்கின்ற வீட்டுத்திட்டங்கள் எந்தத் தரத்தில் இருக்கின்றன, இருக்கப் போகின்றன என்பது தொடர்பான ஆராய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.  பசுமை பூமி என்ற வகையில் கையளிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு 7 பேர்சஸ் என்றளவில் தலா ஒவ்வொரு வீடுகளுக்குமான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.  ஆனால் அந்த ஏழு பேர்சஸ் காணி ஒவ்வொரு வீடுகளுக்கும் அளந்து கொடுக்கப்படவில்லை என்பதுடன் அதற்கான எல்லைகளும் அமைக்கப்படவில்லை. இதனால் பயனாளிகள் தங்களது காணிகளை அடையாளம் கண்டு கொள்வதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். இவ்வாறு பல்வேறு குறைபாடுகளுடன் காணப்படும் இவ்வீட்டுத்திட்டம் தொடர்பாக பலமுறை சம்பந்தப்பட்டவர்களுக்கு சுட்டிக்காட்டியுள்ள போதிலும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லையெனவும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வீடுகள் சில மோசமாக சேதமடைந்து வருவதாகவும் பயனாளிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அதேவேளை இவ்வீட்டுத்திட்டம் கையளிக்கப்படுவதிலும் பல்வேறு அரசியல் தலையீடுகள் காணப்பட்டதுடன் உயர்நீதிமன்றம் வரை சென்று போராட வேண்டிய நிலைமை காணப்பட்டது. பிரவுன்ஸ்விக்கில் அமைக்கப்பட்டுள்ள பசும்பொன் வீடமைப்புத்திட்டத்தில், தீவிபத்தில் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தில் பலருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.  தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்டக் கமிட்டித் தலைவருக்கும், உறுப்பினருக்கும் இரு வீடுகளும் மேலதிகமாக அனர்த்தத்தில் பாதிக்கப்படாத இருவருக்கும் வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.  2017 ஆம் ஆண்டு மே மாதம் வீட்டுத்திட்ட திறப்பு விழா இடம்பெற்ற போது  செங்கொடிச் சங்கத்தின் தோட்டக் கமிட்டித்தலைவர் மற்றும் உறுப்பினருக்கு வீடுகள் மறுக்கப்பட்டமையால் சர்ச்சைகள் மேலெழுந்திருந்தன.  இதற்கு விளக்கமளிக்கும் வகையில் தொழிலாளர் தேசிய சங்கத்தால் ஊடகவியலாளர் சந்திப்பொன்றும் ஹட்டனில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது இ.தொ.கா.உறுப்பினர்களுக்கு 6 வீடுகளும் மலையக மக்கள் முன்னணிக்கு 1 வீடும் செங்கொடிச் சங்கத்துக்கு 2 வீடுகளும் தொழிலாளர் தேசிய சங்கத்துக்கு 12 வீடுகளும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால் பயனாளிகள் இருவருக்கான வீடுகள் இடைநிறுத்தப்பட்டதாகவும் இவை தொடர்பில் அமைச்சரிடம் வினவியபோது கண்டி உன்னஸ்கிரிய, எயாபார்க் போராட்டத்தில் நீங்கள் பங்குபற்றினீர்கள். இனி இவ்வாறான போராட்டத்தில் பங்குபற்றாமல் இருந்தால் திறப்பை வழங்குவதாக தெரிவித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எனவே இப்பிரச்சினையை சட்டரீதியாக அணுகும் வகையில் அமைச்சுக்கு எதிராக மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.  இவ்வழக்கு 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி முதன் முதலாக நீதிமன்றத்துக்கு எடுக்கப்பட்டதுடன், அமைச்சு சார்பில் வழக்கறிஞர் சமூகமளிக்காத காரணத்தினால் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு வழக்கு பிற்போடப்பட்டது.  செங்கொடிச் சங்கமும் சங்கத்தின் அங்கத்தவர்களும் இணைந்து இவ்வழக்கினைத் தாக்கல் செய்திருந்தனர். இதற்கமைய 2017 செப்டெம்பர் 7 ஆம் திகதி பெருந்தோட்ட மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் பிராந்திய இயக்குனர் செங்கொடி சங்கத்துடன் தொடர்பு கொண்டு பிரச்சினையை சுமுகமாக முடிவுக்கு கொண்டுவர விரும்பியதன் பயனாக செப்டெம்பர் 8 ஆம் திகதி பாதிக்கப்பட்ட இருவருக்குமான வீட்டுத்திறப்புகள் கையளிக்கப்பட்டன. இதனால் இம்மாதம் 12 ஆம் திகதி இவ்விடயம் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டு வழக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

மலையக பெருந்தோட்ட பகுதிகளுக்கு தனிவீட்டுத்திட்டம் ஒரு வரப்பிரசாதமாக காணப்பட்டாலும் அரசியல் தலையீடுகளும் அலட்சியப் போக்கும் மீண்டும் மக்களை ஆபத்திலேயே தள்ளிவிட்டுள்ளது. தற்போது மலைநாட்டு புதியகிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலம் 2016 ஆம் ஆண்டு 2835 வீடுகளும் 2017 ஆம் ஆண்டு 2535 வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.  மலையக மக்கள் வாழ்கின்ற நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தளை, மொனராகலை, கேகாலை, இரத்தினபுரி, காலி, மாத்தறை, களுத்துறை, குருநாகல் போன்ற பகுதிகளிலும் இவ்வாறான வீட்டுத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பெருந்தோட்டப் பகுதிகளில் மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளாக 6000 குடியிருப்புக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.  இவர்களுக்கு முன்னுரிமை அடிப்டையில் வீடமைப்புத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.  2016 ஆம் ஆண்டுக்குப் பின் வழங்கப்பட்ட இந்திய அரசின் 4000 வீடமைப்புத்திட்டமானது நுவரெலியா – 1316, கண்டி – 400, மாத்தளை – 30, பதுளை – 700, மொனராகலை – 150 என்றடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  அதேவேளை இந்திய அரசின் 10, 000 வீட்டுத் திட்டமானது நுவரெலியா – 4850, பதுளை – 1150, கண்டி – 1100, மாத்தளை – 450, மொனராகலை – 200, கேகாலை – , இரத்தினபுரி – 750, காலி – 100, மாத்தறை – 100, களுத்துறை – 250, குருநாகல் – 200, கொழும்பு – 150 என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்படவுள்ளது. இவ்வீட்டுத்திட்டங்களின் தரம் தொடர்பிலும் ஆராய வேண்டியது அவசியமாகின்றது.

 

Leave a comment

This website uses cookies to improve your web experience.