Skip links

சிறுவர் சக்தி: மந்த போஷணைக்கு நிவாரணியா?

இலங்கையின் பெருந்தோட்ட பிள்ளைகளின் சுகாதாரம் மற்றும் போசாக்கு என்பன தேசிய மட்டத்துடன் ஒப்பிடுகையில் கீழ் மட்டத்திலேயே காணப்படுகின்றது. இந்நிலைமையை நீக்குவதற்காக பல்வேறு அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 2016/2017 சுகாதார சனத்தொகை மதிப்பீட்டு அறிக்கையின் படி, 5 வயதிற்கு குறைவான குள்ளமான பிள்ளைகள் (வயதுக்கேற்ற உயரம்) 31.7­ வீதமாகவும் (தேசிய மட்டம் 17.3 வீதம்) நிறைகுறைந்த (வயதுக்கேற்ற உயரம்) பிள்ளைகள் 29.7 வீதமாகவும் (தேசிய மட்டம் 20.5) பலவீனமான (வயதுக்கேற்ற பருமன்) 13.4 வீதமாகவும் (தேசிய மட்டம் 15.1) காணப்படுகின்றது. அதேவேளை பெருந்தோட்ட தாய்மார்களின் தொழில் நிலையும் பிள்ளைகளின் போசாக்கில் செல்வாக்கு செலுத்தும் நிலை காணப்படுகின்றது. குழந்தைகளுக்கு தேவைப்படும்போதெல்லாம் தாய்மார் பாலூட்டுவதை வழக்கமாக கொள்ள வேண்டும். தாய்மார்கள் 4 – 6 மாதத்திற்கு பின்னரும் 2 வயதுவரை தாய்ப்பால் மட்டுமன்றி தொடர்ச்சியாக துணை ஆகாரங்களையும் ஊட்டிவரவேண்டும். அப்போதே நிறைகுறைந்த பிள்ளைகளின் வளர்ச்சியானது தொடர்ச்சியாக முழுமையடைய வாய்ப்புள்ளது.

ஆனால் இவ்விடயங்களுக்கு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேலைநேரம், தோட்ட நிர்வாகம் வழங்குகின்ற ஒருவேளைநேர இடைவேளை, பிள்ளைபராமரிப்பு நிலையத்துக்கும் தொழில் இடத்துக்குமான தூரம் மற்றும் பிள்ளைபராமரிப்பு நிலையங்களில் காணப்படும் பற்றாக்குறைகள் என்பன தாய்மாரிடமிருந்து பிள்ளைகளின் தொடர்பை தூரமாக்கும் காரணிகளாக காணப்படுகின்றன். அதனால் தேவையான வேளைகளில் போசாக்கான ஆகாரங்களை வழங்குவதிலும் சிக்கல்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இவ்வாறான சிக்கல்களை போக்குவதற்காக ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டுதலின் கீழ் சுகாதாரம், போசணை மற்றும் சுதேசிய வைத்திய அமைச்சுடன் இணைந்து போசாக்கு தொடர்பான பல்துறை தேசிய நடவடிக்கை திட்டத்தின் (2017 – 2018) ஊடாக மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலம் பெருந்தோட்டத்துறையிலுள்ள 2 – 5 வரையான பிள்ளைகளுக்கிடையில் போசாக்கு தொடர்பான வேலைத்திட்மொன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது. மந்தபோசணையில் உயர் சுட்டியினை காண்பிக்கும் பெருந்தோட்டத்துறை சிறுவர்களின் போசாக்கு மட்டத்தை மேம்படுத்துவதற்கான நீண்டகால திட்டத்தின் அங்கமாக சிறுவர்களுக்கான உப உணவை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இத்திட்டம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சிடம் சில தகவல்களை (MHNV/RTI/10/2019) 06.08.2019 அன்று பெற்றுக்கொள்ள முடிந்தது. அமைச்சின் இச்செயற்திட்டத்தின் மூலம் அதிபோசாக்கு உப உணவாக கூறப்பட்ட ’டிகிரி சக்தி’ எனும் பெயரிடப்பட் பிஸ்கட் வழங்கப்பட்டது. அதிபோசாக்கு உப உணவாக கூறப்பட்ட ’டிகிரி சக்தி’ யில் சோயா, அரிசி, சோளம், மோர் புரதம், பேரிச்சை, வறுத்த வேர்கடலை, திரவகுளுகோஸ், பால்மா போன்றன சேர்வையுறுப்புகளாக (ஐணஞ்ணூஞுஞீடிஞுணtண்) காணப்படுவதாக அமைச்சால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா, இரத்தினபுரி, பதுளை, கேகாலை, கண்டி, காலி ஆகிய மாவட்டங்களிலுள்ள பெருந்தோட்டத்துறை சிறுவர்களுக்கு (2 – 5 வயதுக்குட்பட்ட) வழங்கப்பட்டிருக்கின்றது. இத்திட்டத்தின் தொடக்க விழா உலக சிறுவர் தினமான அக்டோபர் 1ஆம் திகதி 2017 ஆம் ஆண்டு நுவரெலியாவில் இடம்பெற்றது. 40,000 சிறுவர்களை இலக்காக கொண்டு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் 7 பிராந்திய காரியாலயங்களின் ஊடாக அதிபோசாக்கு உபஉணவு விநியோகிக்கப்பட்டிருந்தது. 2017 ஆம் ஆண்டின் காலாண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சித்திட்டத்துக்காக 65 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ’டிகிரி சக்தி’ போசாக்கு பக்கற்று பயனாளி சிறுவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 2018.12.31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இத்திட்டத்துக்காக 43.5 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் 2018 ஆம் ஆண்டு செயலாற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

பெருந்தோட்டத்துறை சிறுவர்களுக்கான பைலட் திட்டத்தில் அண்ணளவாக ஒரு மில்லியன் பைக்கற்றுக்கள் (டிகிரி சக்தி) விநியோகிக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் குறிப்பிட்டுள்ளது. அதேவேளை 453 தோட்டங்களைச் சேர்ந்த 41,000 சிறுவர்களுக்காக 40 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 40,000 சிறுவர்களுக்காக 43.5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. அதேவேளை இந்நிகழ்ச்சித்திட்டத்துக்காக 65 மில்லியன் ரூபா (6.5 கோடி ரூபா) ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் 2018 ஆம் ஆண்டு செயலாற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் வினவியபோது, இத்திட்டத்துக்காக 76,365,640 ரூபா (7.63 கோடி) செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருப்பதானது, (அதற்கான கணக்கறிக்கைகள் தரப்படவில்லை) செலவுத்தொகையில் காணப்படும் குழறுபடிகளை வெளிப்படுத்துவதாக அமைகின்றது.

2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அதிபோசாக்கு உப உணவாக கூறப்பட்ட ’டிகிரி சக்தி’ சுகாதார அமைச்சினால் தடைசெய்யப்பட்டிருந்ததாக பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தில் 2018ஆம் ஆண்டில் திட்ட இணைப்பாளராக கடமையாற்றியிருந்த வசந்த ஹேரத் தெரிவித்திருந்தார். ஆனால் இவை தொடர்பான தகவல்களை அமைச்சிடம் கோரியபோதும் இல்லையென தெரிவிக்கப்பட்டிருப்பதோடு 2019 ஆம் ஆண்டிலும் இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

பெருந்தோட்டத்துறையிலுள்ள பிள்ளைகளின் மந்த போசாக்கினை இல்லாதொழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட செயற்றிட்டமானது, தற்போது முன்னெடுக்கப்படுவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும்கூட இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. அதேவேளை அத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பெருந்தோட்டத்துறை பிள்ளைகளின் போசாக்கு மட்டம் அதிகரித்துள்ளதா என்பதற்கான புள்ளிவிபரங்களும் இல்லை. ஆனால் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவே கூறப்படுகின்றது.

 

Leave a comment

This website uses cookies to improve your web experience.